ஜிப்மர் மருத்துவமனை வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க கோரி அதிமுகவினர் முதலமைச்சரிடம் மனு

    புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் செவிலியர் பணி தேர்வில் புதுச்சேரியை சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு பெற அமைச்சரவை கூட்டி தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசை வயுறுத்த வேண்டுமர என்றும், அதுவரை தேர்வை ரத்து செய்ய வேண்டும் என அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் முத்மைச்சர் ரங்கசாமியை சந்தித்து கடிதம் வழங்கி வலியுறுத்தியுள்ளார்.



புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும், முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமியை நேரில் சந்தித்து கோரிக்கை கடிதம் அளித்தார். அந்த கடிதத்தில், நம் மாநிலத்திலுள்ள ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வேலை வாய்ப்பில் மருத்துவர், செவிலியர், டெக்னீஷியன், உதவியாளர்கள் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களுக்கும் பணி நியமனம் செய்யும் போது புதுச்சேரி மாநிலத்திற்கான தனி இட ஒதுக்கீடு வழங்கப்படாததால் நம் மாநிலத்தை சேர்ந்த தகுதியானவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதில்லை. ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் மொத்தமுள்ள 243 எம்பிபிஎஸ் இடங்களில் 64 இடங்கள் அதாவது, 26.5 சதவீத இடங்கள் புதுச்சேரி மாநிலத்தின் இட ஒதுக்கீடாக வழங்கப்படுகிறது. ஆனால், வேலை வாய்ப்பில் ஒரு இடம் கூட புதுச்சேரி மாநிலத்திற்கு இட ஒதுக்கீடாக வழங்கப்படுவதில்லை.

தற்போது ஜிப்மரில் காலியாக உள்ள 433 செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்ப அரசானை வெளியிடப்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் இதற்காக 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் இதுவரை பெறப்பட்டுள்ளது. இதனால், நம் மாநிலத்தில் செவிலியர் படித்த பிள்ளைகளுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் குறைவாக இருக்கும். எனவே மருத்துவக் கல்லூரியில் 26.5 சதவீத இட ஒதுக்கீடு போன்று, வேலை வாய்ப்பிலும் 26.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால்  நம் மாநிலத்தில் நர்சிங் படித்த சுமார் 115 நபர்களுக்கு செவிலியர் பணி கிடைக்கும்.

மருத்துவமனைக்கு வரும் தமிழ் மொழி பேசும் நோயாளிகளிடம் வட நாட்டிலிருந்து தேர்வாகும் செவிலியர்கள் எந்த மொழியில் நோயாளிகளிடம் பேசுவார்கள் என்பது கூட உணராமல் அகில இந்திய அளவில் செவிலியர் தேர்வு நடத்துவது என்பது தவறான ஒன்றாகும்.

இது சம்பந்தமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சருக்கு அதிமுக சார்பில் கடிதம் அனுப்பியுள்ளதாகவும், இப்பிரச்சனையில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டிய அவசிய நிலை குறித்து உடனடியாக தாங்கள் அமைச்சரவை கூட்டத்தை கூட்டி, ஜிப்மரில் வேலை வாய்ப்பில் நமக்குரிய முழுமையான இடஒதுக்கீடு குறித்து உரிய தீர்மானம் நிறைவேற்றி அதை தலைமை செயலர் மற்றும் சுகாதாரத்துறை செயலர் ஆகியோர் டெல்லிக்கு நேரில் சென்று மத்திய உள்துறை அமைச்சர் மற்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் அமைச்சரவையின் தீர்மானத்தை நேரில் அளிக்க, தாங்கள் உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும். அதுவரை ஜிப்மரில் நடக்கவிருக்கும் செவிலியர் தேர்வை ரத்து செய்யவேண்டும். இவ்வாறு அவர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். புதுச்சேரி கிழக்கு மாநில கழக பொருளாளர் ரவி பாண்டுரங்கன், நகர கழக செயலாளர் அன்பழகன் உடையார், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாபுசாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Comments

Post a Comment